Sunday, May 8, 2011

தே.மு.தி.க., இலவச மையம் மூலம் ஆயிரத்து 500 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க., சார்பில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்தார். விழுப்புரம் தே.மு.தி.க., அலுவலகத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பயிற்சி மைய ஆசிரியர் பிரேமா வரவேற்றார். வடிவுக்கரசி, மல்லிகா, கேப்டன் மன்ற செயலாளர் ராஜசந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கடந்த 2008ம் ஆண்டு முதல் இலவச பயிற்சி மையங்களை துவக்கி கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வருகிறோம். இது வரை 1500 பேர் பயனடைந்துள்ளனர். விஜயகாந்த் பிறந்த நாள்தோறும் நல உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2005ம் ஆண்டில் 35 லட்சம் ரூபாயில் கல்வி உதவித் தொகைகளும், 2007ல் பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார். 2008 முதல் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் 66 கம்ப்யூட்டர் மையங்களை அமைத்து பயிற்சி அளித்து வருகிறார். மாதத்திற்கு 13 ஆயிரம் செலவினம் செய்து மையத்தை நடத்துவது எளிதானதல்ல. அரசு விழாக்களில் இலவசங்களை கொடுத்துவிட்டு ஒரு சிலர் ஓட்டு கேட்டனர். அது போன்றல்ல இது, சேவை நோக்கத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும் திருக்கோவிலூர், பகண்டை, செஞ்சியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் விரைவில் துவக்கப்படும். மின்வெட்டு, விலைவாசி உயர்வில் மக்கள் வெறுப்பில் உள்ளனர். பல கிராமங்களில் குடிநீர் போன்ற அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. ஆட்சி மாற்றம் வரும், நிச்சயம் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு வெங்கடேசன் பேசினார். பயிற்சி முடித்த 400 பேருக்கு சான்றிதழ்களும், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment